தண்டனை விதிக்கப்பட்ட காசி PT Desk
தமிழ்நாடு

பெண்களை ஏமாற்றி மிரட்டிய வழக்கு; குற்றவாளி காசிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை- போக்சோ வழக்கில் தீர்ப்பு

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காசி மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

PT WEB

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியில் துன்புறுத்தி வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில், கைதான காசிக்கு போக்சோ வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மகிளா நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி (29). இவர் மீது, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரால் காசி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பொருளாதார ரீதியில் வசதியுடன் காணப்படும் இளம் பெண்களுடன் நட்பாக பழகி, அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைக்கும் காசி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பெண்களே தன்னை காதலிக்கும் அளவிற்கு அவர்களை ஏமாற்றி, நம்பிக்கையின் அடிப்படையில் அவருடன் நெருங்கி பழகும் பெண்களை வீடியோ பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் தமிழகம் மற்றும் பெங்களூரு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும் இதுபோன்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காசி மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

காசி

காசியின் கூட்டாளிகளான டேசன் ஜினோ, தினேஷ் கௌதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைப்பதாகவும் ஆதாரங்களை அழித்த காரணத்தாலும், காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்கு பின் பிணையில் வெளிவந்தார்.

இந்நிலையில், காசியின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த வழக்குகளில் பல்வேறு சாட்சியங்கள், தடயங்கள் மற்றும் வாக்குமூலங்களை பெற்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில், பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 376(2) என் பிரிவின் கீழ் காசிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கினார்.