மகளிர் உரிமைத்தொகை - பெண்கள் போராட்டம்  PT
தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: “அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகிறோம்...”- நாகையில் பெண்கள் போராட்டம்!

நாகை மாவட்டம், கருங்கண்ணி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் நியாய விலை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அரசு அதிகாரிகளால் தினமும் அலைக்கழிக்கபடுவதாக அவர்கள் வேதனையும் தெரிவித்தனர்.

Jayashree A

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இத்திட்டத்தின்கீழ் நாகை மாவட்டத்திலும் பல்வேறு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. என்றாலும்கூட, அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த தகுதியுள்ள பல பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து உரிமைத் தொகை திட்டத்துக்குரிய தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள இ-சேவை மையத்தில் கோடாட்டாசியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி விடுப்பட்டவர்கள் அண்மைக் காலமாக இந்த இ-சேவை மையத்தில், மேல்முறையீடு செய்து வருகிறார்கள். ஆனால் மேல்முறையீடு செய்த நிலையிலும், நாகை மாவட்டம் கருங்கண்ணி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உரிய பதில் அளிக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள் கருங்கன்னி பகுதியில் உள்ள நியாய விலை கடையை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இ சேவை மையம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அலைந்தபோதும் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.

குறுந்தகவல் மூலம் பதில் வரும் என அலட்சியமாகக்கூறி அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய பெண்கள், தமிழக முதல்வர் உடனடியாக மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.