மருத்துவர்களுடன் சிறுவன் திவாகர் pt desk
தமிழ்நாடு

நாகை: பாம்பு கடித்து கோமாவுக்கு சென்ற சிறுவன்... காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்! குவியும் பாராட்டு!

நாகையில் கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் கோமாவுக்கு சென்ற 10 வயது சிறுவன், அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை பெற்றுள்ளது.

webteam

செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்

நாகை மாவட்டம் மோகனூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் திவாகர் (10). கடந்த மே 18ஆம் தேதி தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு திவாகரின் கையில் கடித்தது. இதையடுத்து வலியில் அலறித் துடித்த திவாகரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

ஆனால் செல்லும் வழியிலேயே விஷம் ஏறியதால் திவாகரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்தன. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் சரண்ராஜ், வேத செந்தில் வேலன், முகமது ஷேக் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் லாக்ட்-இன் சின்ட்ரோம் (Locked-in syndrome) என்ற ஒரு அரிய நரம்பியல் பாதிப்புக்குள்ளான திவாகர் கோமா நிலைக்கு சென்றான். இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிய திவாகர், பூரண குணமடைந்து வீடு விரும்பியுள்ளார்.

மருத்துவர்களுடன் சிறுவன் திவாகர்

இதையடுத்து மகனின் உயிரை காப்பாற்றிய நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு திவாகரனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பாம்பு கடியால் கோமாவுக்கு சென்ற சிறுவனை திறமையாக செயல்பட்டு காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.