தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை போராடி மீட்பு

கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை போராடி மீட்பு

webteam

நாகை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் காலை 9.30 மணியளவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அங்கு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் 2 மணியளவில் கார்த்திகேயன் என்பவரின் 2 வயது குழந்தை சிவதர்ஷினி எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுதொடர்பாக தகவலறிந்து தலைஞாயிறு மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். முதலில் குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டப்பட்டு மீட்கும் பணி நடைபெற்றது. 

அதன்படி சுமார் 15 அடியில் சிக்கியிருந்த குழந்தை சிவதர்ஷினியை இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் மீட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை தலைமை அரசு மருத்துவனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக கூறி, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூடி நடவடிக்கை எடுத்தனர்.‌