தமிழ்நாடு

கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

rajakannan

சென்னை கொளத்தூர் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு கடந்த நவம்பர் மாதம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்தனர். அதில் வடநாட்டைச் சேர்ந்த சிலர் பைகளுடன் செல்வது தெரியவந்தது. நகைக்கடைக்கு மேல் தளத்தில் கடை நடத்தி வைத்திருந்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நகைகளைக் கொள்ளையடித்து தெரியவந்தது. தலைமறைவானவர்களை தேடி காவல்துறையைச் சேர்ந்த ஒரு குழு ராஜஸ்தான் விரைந்தது.

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல் ஆய்வாளரை கொள்ளையன் நாதுராம் என்பவன் சுட்டுக்கொன்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைப்பெற்ற விசாரணையில் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளான பெரியபாண்டியனை அவர்களிடம் மீட்க சக காவலர் தவறுதலாகச் சுட்டதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்தக் கொள்ளையன் நாதுராமை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ள நாதுராம், தினேஷ், பக்தா ராம் ஆகிய மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சிறையில் உள்ள கொள்ளையர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய ராஜமங்கலம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில், நாளை நாதுராம் உள்ளிட்ட மூன்று கொள்ளையர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷ், பக்தாராம் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.