தமிழ்நாடு

சசிகலா பயணம் செல்வதை வரவேற்கிறேன்; அது அவசியமான ஒன்று - சீமான்

சசிகலா பயணம் செல்வதை வரவேற்கிறேன்; அது அவசியமான ஒன்று - சீமான்

Sinekadhara

சசிகலா பயணம் செல்வதை வரவேற்கிறேன்; அது அவசியமான ஒன்று என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்திருக்கிறார்.

மருதுபாண்டியர் 220 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மருதுபாண்டியர் உருவ படத்திற்கு மலர் தூவி மலர்வணக்கம் நடத்தினார். இதையடுத்து அவர் பேட்டியளித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ’’சசிகலா வருவது அதிமுக கட்சியில் உள்ள தொண்டர்களின் விருப்பமாக இருக்கலாம். சசிகலா பயணம் செல்வதை நான் வரவேற்கிறேன். அது அவசியமான ஒன்று என நான் நினைக்கிறேன்’’ என்றார்.

நாம் தமிழர் கட்சி பாஜகவின் பீடீம் என்று பேசப்படுவது குறித்து கேட்டபோது, ‘’இந்து சமயம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றதல்ல; அது எங்கள் மேல் திணிக்கப்பட்டது. மற்ற மாநிலத்தில் உள்ளவர்களை தமிழகம் ஏற்க முடியுமா? தமிழன் எப்போது தன்னை இந்தியன் என்று கருதினானோ அன்று செத்தது பண்பாடு; என்னை பாஜகவின் பி டீம் என்று கூறுகிறீர்கள். என் கட்சியில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ பிள்ளைகளிடத்தில் விவாதம் செய்து நிரூபித்தால் நான் விட்டுவிட்டு செல்கிறேன்.

கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கு திமுக செய்த நன்மைகளை ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம். பாஜக 4 இடத்தில் வந்து விட்டது நான் ஒரு இடத்தில் கூட வரவில்லை. நான் இந்து இல்லை; என் மார்க்கம் சைவம். நான் வேல் எடுக்கும்போது வெட்கப்பட்டார்கள்; பாஜக எடுக்கும்போது பாராட்டுகிறார்கள். பின்பு ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வேல் எடுத்தார்கள். தமிழ் நடிகர்கள் தமிழராக இருக்க முடியும்; தமிழ் நடிகர் அல்லாத ஒருவர் தமிழராக எப்படி இருக்க முடியும்?’’ என்றார். தொடர்ந்து, துரை வைகோ கட்சிக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும், பணியை செய்ய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.