முப்பதே நாட்களில் முதலமைச்சராவது எப்படி என்று ரஜினிகாந்திடம் இருந்துதான் கற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலையணிவித்து மரியாதை செலுத்தியபின் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், ரஜினி கட்சி நிர்வாகிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ‘’இத்தனை ஆண்டுகளில் ரசிகர் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகளில், செயல்பாட்டாளர்களில் ஒருவர் கூடவா உங்கள் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த தகுதி பெறவில்லை? அவர்களில் ஏன் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை? காங்கிரஸ் உட்பட பல கட்சிகளிலிருந்து விலகிவந்த தமிழருவி மணியன், பாரதிய ஜனதாவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி ஆகியோரை தேர்வு செய்துள்ளீர்கள்.
தீவிர இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்த அவரை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி மதச்சார்பற்ற, சாதி மத உணர்வற்ற அரசியலை நடத்தமுடியும்?’’ என்று அடுத்தடுத்து பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.