சீமான் pt web
தமிழ்நாடு

பாமகவை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர்; எத்தனை சதவீத வாக்குகள்? கடந்த காலங்களின் நிலவரம் என்ன?

நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8.22% வாக்குகள் பெற்றுள்ளது.

Angeshwar G

மக்களவைத் தேர்தல் முடிவுகள்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கியது. முடிவில், பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி

INDIA கூட்டணியைப் பொருத்தவரையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமாக அந்த கூட்டணி, 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக 22 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

நாம் தமிழருக்கு 8.22% வாக்குகள்

தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு 8.22 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுகிறது.

8.22 % என்பது, பாமக வாக்கு சதவிகிதத்தை விட அதிகம். பாமக 4.33% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி

சின்னம் இல்லையென்றாலும் சாதனை!

முன்னதாக, நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில (கர்நாடகா) கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லிவரை முட்டி மோதிப் பார்த்தனர் நாம் தமிழர் கட்சியினர். ஆனாலும் ஏதும் நடக்கவில்லை. தேர்தல் நடப்பதற்கு குறைவான நாட்களே இருந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர் நாம் தமிழர் கட்சியினர். தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்த நிலையில், 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பிற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த கால நாம்தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனியாக, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் பெரும் தோல்வியை சந்தித்தது. அக்கட்சி மொத்தமாக 1.07% வாக்குகளை மட்டுமே பெற்றது.

அடுத்து, 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. தொடர்ந்து தோல்வியைப் பற்றி கவலைப்படாத அந்தக் கட்சி,

மீண்டும் அடுத்து நடைபெற்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு, இந்த முறை (2019) கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பரப்புரையில் சீமான்

அப்போது அக்கட்சி 3.9 சதவிகித வாக்குகளை அறுவடை செய்திருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டைவிடச் சற்றுக் கூடுதலாகப் பெற்றிருந்தது.

மேலும் அதே ஆண்டு நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு 3.15 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 6.6 சதவிகித வாக்குகளைப் பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு 8.22% வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த கட்சிக்கு எத்தனை சதவீதம்? தமிழ்நாடு Vs பாஜக!

தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை திமுக 26.93 சதவிகித வாக்குகளையும், அதிமுக 20.46 சதவிகித வாக்குகளையும், பாஜக 11.24 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 10.73 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 8.22 சதவிகித வாக்குகளும் பாமகவுக்கு 4.33 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. மேலும், தேமுதிகவுக்கு 2.59 சதவிகித வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.52 சதவிகித வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.15 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நோட்டாவுக்கு 1.06 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய அளவில், பாஜக 36.56 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் 21.19 சதவிகித வாக்குகளும், சமாஜ்வாதி 4.58 சதவிகித வாக்குகளும், திரிணமூல் காங்கிரஸ் 4.37 சதவிகித வாக்குகளும், பகுஜன் சமாஜ் 2.04 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கு 1.98 சதவிகித வாக்குகளும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1.57% வாக்குகளும், உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 1.48% வாக்குகளும், ஷிண்டே சிவசேனாவுக்கு 1.15% வாக்குகளும் கிடைத்துள்ளன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 0.92 சதவிகித வாக்குகளும், பிஜூ ஜனதா தளம் 1.46 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மி 1.11 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.