தமிழ்நாடு

நாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..!

நாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..!

Rasus

நாயை காணவில்லை என காவல்நிலையத்திற்கு புகார் வருவதுண்டு. ஆனால் சென்னையில் தவறான சிகிச்சையால் தனது இரண்டு நாய்கள் உயிரிழந்து விட்டதாக காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று சென்றிருக்கிறது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள் மோசஸ்- லிடியா பத்மினி தம்பதியினர். 8 ஆண்டுகளுக்கு முன்பு மோசஸின் நண்பர் அவரிடம் நாய்க்குட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கு ஆசையாய் பாப்பு என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் மோசஸ். அவரது மனைவி பத்மினிக்கும் பாப்பு செல்லப்பிள்ளை. இரண்டு ஆண்டுகள் கழித்து பாப்பு 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் 6 குட்டிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டனர் மோசஸ் தம்பதியினர். அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்தனர்.

பாப்புவும், புஜ்ஜியும் மோசஸ் தம்பதி மீது உயிராய் இருந்தன. வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் பாப்புவும், புஜ்ஜியும்தான் தனக்கு துணையாக இருப்பார்கள் என்று கூறுகிறார் பத்மினி. மோசஸ் தம்பதி மட்டுமல்ல அக்கம்பக்கத்தினருக்கும் பாப்பு மற்றும் புஜ்ஜி மீது அலாதி பிரியம். இந்த நிலையில் பாப்புவுக்கும் புஜ்ஜிக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக ஒன்றன்பின் ஒன்றாக இரண்டையும் சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அடுத்தடுத்து பாப்புவும், புஜ்ஜியும் இறந்துவிட்டன. இதுகுறித்து மோசஸ் கூறும்போது, “  புஜ்ஜி இறந்த சிறிது நேரத்திலேயே பாப்புவும் இறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதன்பிறகே சிகிச்சை மீது எங்களுக்கு சந்தேகம் வந்தது” என்கிறார் மோசஸ். இதனையடுத்து  சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனை மீது குமரன் நகர் காவல்நிலையத்தில் மோசஸ் புகார் அளித்துள்ளார்.

வீட்டில் ஒருவர் இறந்தால் என்ன செய்வார்களோ அதே போல் பாப்புவின் உடலை வீட்டில் கிடத்தி அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். இனி தனக்கு யார் இருக்கிறார்கள் என்று கண்ணீர் வடிக்கும் மோசஸின் மனைவியை பார்க்கும்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் சற்று கண் கலங்கினர்.

நாய்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையை தொடர்புகொண்டபோது அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை. பாப்பு மற்றும் புஜ்ஜியின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அவற்றின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்.