தமிழ்நாடு

“நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க இந்தியா முயற்சி”- மயில்சாமி அண்ணாதுரை

webteam

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது என இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அறிவியல்-தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவரும் இஸ்ரோவின் சந்திரயான் இயக்க முன்னாள் இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர், “சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ஆயுள் காலம் முடிவதற்குள் சந்திரயான்-3 ஐ அனுப்ப வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இந்தியா நிலவில் ஆராய்ச்சி செய்வது உலக நாடுகளிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இஸ்ரோவும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. அதனுடைய ஆயுட்காலம் குறைவு என்பதால் நிலவிலேயே ஒரு சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு உலகநாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமையும்போது, இந்தியாவும் அதில் பங்குகொள்ளும். அதன் முதல்கட்டமாகத்தான் ககன்யான் அனுப்பப்பட உள்ளது.

எதிர்காலத்தில் நிலவு என்பது பூமியின் இன்னொரு கண்டமாக வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளப்படும் இஸ்ரோவின் ஆராய்ச்சிகள், சாமானிய மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளன. பருவநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிவித்தல், வெள்ளத்தடுப்பு, காட்டுத்தீ, உள்நாட்டில் தீத்தடுப்புப் பணிகள், எல்லை பாதுகாப்பு, வங்கிகளின் செயல்பாடுகள் இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும், அது அனுப்பிய செயற்கைக்கோள்களும் பெரிதும் பயன்படுகின்றன” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்தியா 3 லட்சம் தானியங்கி வங்கிகளுடன் வங்கிச் சேவையை நாட்டில் அளித்து வருவதற்கு இஸ்ரோ செயற்கைக் கோள்களின் தகவல் தொடர்புகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இனிவரும் காலங்களில் செல்போன் டவர்கள் இல்லாத இடத்திலும்கூட செயற்கைக்கோள் தொழில் நுட்பத்துடன் தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.