தமிழ்நாடு

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வாய்ப்பு!

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வாய்ப்பு!

webteam

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படவுள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

கிபி.1743 முதல் 1837 வரையிலான காலத்தில் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை பல சத்திரங்களை அமைத்தனர். இதில் தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் உள்ளிட்ட 20 சத்திரங்கள் முக்கியமானவை. 

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டு தகவலின்படி, காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரை செல்வோருக்கு உண்டு உறைவிடமாக இந்த சத்திரம் இருந்துள்ளது.ஆங்கிலேயர் வருகைக்குப் பின் பள்ளிக்கூடமாகவும் பின்னர் மாணவர் தங்கும் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்ட சத்திரம் தற்போது சேதம் அடைந்த நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.  மர வேலைபாடுகள், அழகிய கட்டிட வேலைபாடுகள் என நிற்கும் முத்தம்மாள் சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தொல்லியல் துறையினர் முத்தம்மாள் சத்திரத்தை இரு தினங்களுக்கு முன்னர் ஆய்வு செய்தனர். இது குறித்து தெரிவித்துள்ள தொல்லியல் துறையினர், ஆய்வு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்பின் சத்திரம் சீரமைக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்