தமிழ்நாடு

பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டும்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு

பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டும்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு

kaleelrahman

வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது. பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், எம்.கோவிந்தராஜ், ஜி.கே.இளந்திரையன், ஜெ. சத்திய நாராயண பிரசாத், உள்ளிட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய, மாநில பார் கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏற்புரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டெல்லியில் உள்ள குளிரை காட்டிலும், இங்குள்ள பாச மழையால் உடல் நடுங்குகிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது என தெரிவித்ததுடன், வழக்கு ஒன்றில் தன் நிலை மறந்து கோபப்பட்டதன் காரணமாக அந்த வழக்கை வேறு அமர்விற்கு மாற்றியதாக தெரிவித்தார். பதவி ஆடை மாதிரிதான், ஆனாலும் பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமென என குறிப்பிட்டார்.

நிலுவை வழக்குகள் இருந்தாலும், தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுட்டிக்காடியதுடன், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால் தான் நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

எனவே மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டுமென தெரிவித்தார். உச்ச நீதிமன்ற கிளை அமைக்கும் விவகாரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.