புத்தக வெளியீட்டு விழா ட்விட்டர்
தமிழ்நாடு

“கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்” - இளையராஜா பேச்சு

“கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்” என இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.

PT WEB

2024ஆம் ஆண்டிற்க்கான சென்னை புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் (ஜனவரி 3) தொடங்கியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகக் காட்சி, ஜனவரி 21ஆம் தேதி வரை 19 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னை தி.நகரில் ஆண்டாள் திருப்பாவை குறித்த மால்யாடா (புனித மாலை) - Maalyada The Scared Garland என்ற புத்தகம் ஜெயசுந்தர் என்ற எழுத்தாளர் எழுதி, கேஷ்வ ஓவியம் வரைந்த புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய இசைஞானி இளையராஜா, “எனது முதல் படத்திலேயே ஆண்டாள் பாடிய பாடலை இடம்பெறச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் சிவபக்தன். நான் இவற்றிற்கு எல்லாம் எதிரி அல்ல. திவ்யபிரபந்தத்தை ஒலிப்பதிவு செய்துவைத்துள்ளேன்; சரியான தருணத்தில் வெளியிடுவேன். இப்போதெல்லாம் ஒரு பாடல் உருவாக்க 6 மாதம் ஆகிறது; ஒரு வருடம்வரைகூட எடுத்துக் கொள்கின்றனர். அவர்களை குறைசொல்லவில்லை, அவர்களுக்கு வரவில்லை, அதேநேரம் இதில் சாதனை படைத்தவர்களும் உண்டு.

இசைஞானி என்ற பட்டத்திற்கு தகுதியானவனா நான் என்பது கேள்விக்குறியே. முறையான சங்கீத ஞானம் இல்லாதவன் நான். மக்கள் என்னை ’இசைஞானி’ என அழைக்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறேன். கர்வத்தில் இருந்து நான் எப்போதே விடுபட்டுவிட்டேன். எந்த புகழ்மொழியும் என்னை ஒன்றும் செய்யாது. ஒருநேரத்தில், தீபாவளிக்கு 3 படங்களுக்குப் பின்னணி இசை அமைத்துள்ளேன். உலகத்திலேயே 3 நாளில் 3 படங்களுக்கு இசை அமைத்தது நான்தான். திருவண்ணாமலைக்கு ஒருமுறை சென்றுவிட்டு வந்தபிறகு, ஓர் அதிகாலைப் பொழுதில் பாடக் கிடைத்த, ’பரம்பொருளே’ என்ற பாடலை எழுதத் தொடங்கினேன். ஒரே நேரத்தில் 10 பாடல்களை எழுதி முடித்தேன். அடுத்த நாள் 10 பாடல்கள் எழுதினேன். தமிழ் எழுத்தாளர் நமச்சிவாயத்திடமும் இதுபற்றி தெரிவித்தேன். அவர் திருப்பள்ளி எழுச்சியும் எழுதச் சொன்னார். அதிலும் 10 பாடல்கள் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆண்டாள் பாடிய திருப்பாவை இயற்கையுடன் ஒன்றி இருக்கிறது. இயற்கையில் உள்ள கிளிகள், பறவைகள், குயில்கள், மயில்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து அவர் அத்துடன் ஒன்றி வாழ்ந்ததாலேயே திருப்பாவையை ஆண்டாளால் பாட முடிந்தது” என்றார்.