தமிழ்நாடு

சேலம் வியாபாரி மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

சேலம் வியாபாரி மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

sharpana

”சேலம், ஆத்தூர் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசனை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்டனத்துக்குரிய செயல்” தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வியாபாரியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார். குடிப்பழக்கமுடைய இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலைப் பகுதிகளில் மது அருந்தி விட்டு மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முருகேசன் மற்றும் இவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த போலீஸார், முருகேசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடல் நிலை மோசமடைந்ததால், இன்று அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ”சேலம், ஆத்தூர், இடையப்பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசனை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்டனத்துக்குரிய செயல். அவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.