கொலை செய்யப்பட்ட முரளி கிருஷ்ணா  PT desk
தமிழ்நாடு

சென்னை: ஓடும் ரயிலில் நடந்த கொடூர கொலை; தெறித்து ஓடிய பயணிகள் - அதிர்ச்சி சம்பவம்?

கும்மிடிப்பூண்டி டு சென்னை செல்லும் ஓடும் ரயிலில் கொலை நடந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா (44). இவருடைய மனைவி வெண்ணிலா. இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினந்தோறும் கும்மிடிப்பூண்டி டு சென்னை மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரயிலில் பணிக்குச்  சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இன்று வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இவரது பெரியப்பா மகனான ரவீந்திரன்(41) என்பவர், முரளி கிருஷ்ணாவுடன்  தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சென்னை செல்லும் புறநகர் ரயிலில் இருவரும் ஏறிச் சென்றுள்ளனர். ரயிலில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

முரளி கிருஷ்ணா

இதனையடுத்து ரயில் அத்திப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, ரவீந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளி கிருஷ்ணாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் முரளி கிருஷ்ணா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் ரயிலில் இருந்த பயணித்தவர்கள் அலறியடித்து அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். 

இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் முரளி கிருஷ்ணாவை மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது ரயிலில் இருந்து ரவீந்திரன் ஒட்டம் பிடிக்க முயன்றபோது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே  பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல்துறையினர், உடலை மீட்டு  பிரேதப்  பரிசோதனைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட ரவீந்திரன்

பின்னர் கைது செய்யப்பட்ட ரவீந்திரனை இருப்புப்பாதை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை  மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட முரளி கிருஷ்ணாவுக்கும், அவரது பெரியப்பா மகனான ரவீந்திரனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததும், இதனால் தான் கொலை நடந்துள்ளது என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் கொலை நடந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.