Accused pt desk
தமிழ்நாடு

ஜாமீனில் வெளியே வந்து 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி பீகாரில் கைது

webteam

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு பீகார் மாநிலம் நாளந்தா பகுதியைச் சேர்ந்த தயாள் சேகர், ஜெய் கிஷோர், பவன் சிங் ஆகிய மூவரும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் சரியாக வேலை செய்யாததால் கேரளாவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜரிடம் புகார் தெரிவித்துள்ளார். தங்கள் மீது புகார் தெரிவித்த கோபத்தில் மூவரும் இணைந்து வெங்கடேசனை அடித்துக் கொலை செய்தனர்.

Arrested

கொலை சம்பவத்தில் தயாள் சேகர், ஜெய் கிஷோர், பவன் சிங் ஆகிய மூவரையும் அப்போதே கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்பு, 2009 ஆம் ஆண்டில் 100 நாட்கள் கழிந்த நிலையில், மூவரும் ஜாமீனில் வெளிவந்து அவர்களது சொந்த ஊருக்கு சென்று தலைமறைவாகினர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் பொழுது மூவரும் ஆஜராகாமல் இருந்துள்ளனர். இதனிடையே போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து மூவருக்கும் தண்டனை பெற்று கொடுத்துள்ளனர்.

ஆனால், மூவரும் தலைமறைவாக இருந்ததால் மூவரையும் பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கொடுங்கையூர் தனிப்படை போலீசார், கடந்த வாரம் பீகார் பகுதிக்கு சென்று அங்கு தலைவராக இருந்த அணில் குமார் (எ) தயாள் சேகரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இன்னமும் தலைமறைவாக உள்ள ஜெய் கிஷோர் மற்றும் பவன் சிங் ஆகியோரை கொடுங்கையூர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.