முரசொலி அலுவலகம் pt web
தமிழ்நாடு

முரசொலி நிலம் வழக்கு - “தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு முழு அதிகாரம்” - சென்னை உயர்நீதிமன்றம்

முரசொலி நிலம் தொடர்பான வழக்கை தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, “அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை. சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது” என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “சம்பந்தப்பட்ட நிலம் மாதவன் நாயர் என்பவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்கப்பட்டது. பஞ்சமி நிலம் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டுக்கு முன்பான ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட இந்த வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று காலை முதல் வழக்காக விசாரித்தார். அதில் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தவும் அனைத்து தரப்பிற்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றன் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கை தொடுத்த சீனிவாசன் என்பவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆர்.எஸ்.பாரதி, ‘இந்த விசாரணையை நடத்தக்கூடாது. அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை’ என தெரிவித்தார். அதுவல்ல, ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது” என தெரிவித்தார்.