தமிழ்நாடு

சேலம்: திடீர் நெஞ்சுவலி... சாலையிலேயே சரிந்துவிழுந்து நகராட்சி பணியாளர் மரணம்

சேலம்: திடீர் நெஞ்சுவலி... சாலையிலேயே சரிந்துவிழுந்து நகராட்சி பணியாளர் மரணம்

நிவேதா ஜெகராஜா

சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் நகராட்சி பணியாளரொருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். சாலையில் சுருண்ட அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). இவர் ஆத்தூர் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் இவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆத்தூர் நகராட்சிக்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். இதனால் அன்றாடம் தனது சொந்த ஊரில் இருந்து பணிக்காக ஆத்தூருக்கு பேருந்தில் சென்று வந்திருக்கிறார் வெங்கடேசன். வழக்கம்போல் இன்று சேலத்திலிருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றுள்ளார் அவர். அப்போது திடீரென நெஞ்சுவலி காரணமாக மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இந்தப் பரிசோதனை அறைக்கு வெங்கடேசன் பிரேதத்தை எடுத்துச் சென்றனர்.