உத்தமபாளையம் அருகே கழிப்பறை செப்டிக் டேங்க் தொட்டியின் மேல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் பேரூராட்சியில் உள்ள பாவலர் தெருவில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவரின் ஏழு வயது மகள் நிகிதா ஸ்ரீயும் அதே தெருவில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு வந்த மேற்கு நந்தகோபால் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் ஆறு வயது மகள் சுப ஸ்ரீ ஆகிய இருவரும் சேர்ந்து கழிப்பறை அருகே உள்ள செப்டிக் டேங்க் தொட்டியின் மேல் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பழுதான செப்டிக் டேங்க் மூடி திடீரென உடைந்து இரண்டு சிறுமிகளும் செப்டிக் டேங்கில் விழுந்து மூழ்கினார். இதையடுத்து சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் என்பவர் விரைந்து வந்து குழிக்குள் இறங்கி இருவரையும் தூக்கினார். இதைத் தொடர்ந்து பலத்த காயமடைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட இருவரையும்; உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் ஒரு சிறுமியும் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது மற்றொரு சிறுமியும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் செப்டிக் டேங்க் மற்றும் டேங்க் மூடியை சரி செய்ய கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.