சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பதவியேற்றதும் தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தினார். பதிலுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மலர்க்கொத்து வழங்கினார்.
இந்த விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை நீதிபதி மற்றும் ஆளுநருக்கு மலர்க்கொத்து வழங்கினர். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், அவரை தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது.
நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 1960-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தவர் ஆவார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2007-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பண்டாரி பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பண்டாரி வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.