மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணி சுற்று வட்ட சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த கண்டெய்னர் லாரியை மதுரை வணிக வரித்துறை இணை ஆணையர் இந்திரா தலைமையிலான குழு சோதனை செய்தனர். அப்போது 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து மதுரை மாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் மாட்டுதாவனி பேருந்து நிலைத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மும்பையில் உள்ள கம்பெனியிலிருந்து நெல்லை மானூரில் செயல்படும் கிளீன் டெக் சோலார் கம்பெனிக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதும் இதன் மூலம் 50 லட்சம் ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்நிறுவனங்கள் இதற்கு முன்பு வரிஏய்ப்பு செய்துள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் அல்லது அபராத தொகை செலுத்தும் பட்சத்தில் சோலார் பேனலுடன் கண்டெய்னர் லாரி விடுக்கப்படும் என தெரிவுத்துள்ள வனிகவரித்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.