முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியை நோக்கி கீழிறங்கி வருவதால் தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி, தேக்கடியில் கடந்த ஜூன் 8ம் தேதி கேரளாவின் தென்மேற்கு பருவமழை சாரலாக துவங்கியது. இதனால் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் உயரும், முதல்போக சாகுபடியை துவக்கலாம் எனத் தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை கிடைக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்தது.
இந்நிலையில் நில நாட்கள் முற்றிலும் ஓய்ந்த தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்து வருகிறது. நேற்று அணையில் 15 மில்லி மீட்டர், இன்று காலை நிலவரப்படி அணையில் 17 மில்லி மீட்டர், தேக்கடியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஆனாலும் வறண்ட பூமி நீரை உறிஞ்சுவதால், அணைக்கு நீர்வரத்து கோடை காலத்தைப்போல விநாடிக்கு வெறும் 7 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டமும் தினமும் சிறுசிறு புள்ளிகளாக குறைந்து 112.10 அடியாகி 112 அடியை நோக்கி கீழிறங்கி வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அணையில் இருந்து தமிழக குடிநீருக்காக விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 1,247 மில்லியன் கன அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை வலுத்து அணை நீர்மட்டம் உயர வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் வேண்டுதாலாக இருக்கிறது.