முத்ரா யோஜனா திட்டம் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் கடனுதவி என பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கானோர் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் திடீரென வதந்தி ஒன்று பரவியுள்ளது. எந்தவித ஆவணங்களும் இன்றி அனைத்து பெண்களுக்கும் மத்திய அரசு திட்டமான முத்ரா கடன் திட்டத்தில் உடனே கடன் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் குவிந்ததால், கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர் ஒலிபெருக்கி மூலம் முத்ரா திட்டம் குறித்து காவல்துறையினர் விளக்கினர். பெண்களுக்கு மட்டுமின்றி, சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் உதவி வழங்குவதே முத்ரா திட்டம் என எடுத்துக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடனுக்காக விண்ணப்பிக்கச் சென்ற பெண்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பினர்.