தமிழ்நாடு

காக்கப்படுமா மண்பாண்டங்களை உருவாக்கும் கலை ?

காக்கப்படுமா மண்பாண்டங்களை உருவாக்கும் கலை ?

webteam

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு குடும்ப அட்டைக்கு வழங்கும் பொங்கல் பரிசுடன் மண் பானை வழங்க அரசுக்கு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14-ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அதிகாலையில் புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு மண் பானையில் பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த  பொங்கலுக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம், அதியமான்கோட்டை, நார்த்தம்பட்டி, மாதேமங்கலம், அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், ஏரியூர், தோழூர், நலப்பரம்பட்டி, கொளகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பானை களிமண் மற்றும் மணல் கலந்து பதப்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது. மண்பானை தயாரிப்பு பணியில் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் ஈடுபட்டு வருகிறன்றனா். மண் பதப்படுத்துதல், பானை செய்தல் பணிகளில் ஆண்களும், பானைக்கு வண்ணமிடும் பணியில் மகளிரும் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு தயாரிக்கப்படும் பானைகள் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமப் புறங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வியாபாரிகளும் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கிலோ முதல் 20கிலோ வரை பொங்கல் வைக்கும் அளவில், 5 வகையான மண் பானைகள் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.15 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மண் பானை உற்பத்தி கடந்த ஆண்டை விட அதிகரிகத்துள்ளது. மேலும் மண் பானை செய்ய போதிய அளவு களிமண் கிடைக்கவில்லை. ஏனென்றால், ஏரிகளில் களிமண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளாதாலும், மண் எடுக்க வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாலும் களிமண் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் லாபம் குறைவாக கிடைக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு மட்டும் பானைகள் பொதுமக்கள் வாங்குகிறார்களே தவிர மற்ற நேரங்களில் எங்களுக்கு வேலையின்றி தவிக்கிறோம். பொங்கல் நாட்களில் கூட  நாங்கள் ஒரு விலை சொன்னால் அவர்கள் மண் பானை தானே என மிக குறைந்த ரூபாய்க்கு கொடுங்க என பொதுமக்கள் கேட்கின்றனர். இதனால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் மண்பானை தொழில் செய்ய தற்போது புதியதாக யாரும் வருவதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.இந்த மண்பாண்ட தொழில் என்பது ஒரு அறிய கலை. இந்த கலையை பாதுகாக்க வேண்டும் என்பதால் இந்த தொழிலை செய்து வருகிறோம். மண்பாண்ட தொழிலில் வருவாய் குறைவு என்பதால், பெரும்பாலானோர் மண்பாண்ட தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுள்ளனர்.

இந்த தொழிலை செய்து வரும் எங்களுக்கு அரசு உதவி தொகை மற்றும் மானிய கடன்களை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, ஏரிகளில் களிமண் எடுக்க தடை விதிக்கமால், தேவைபடும் நேரங்களில், தேவையான அளவு களிமண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.மண் பாண்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். மேலும் அரசாங்கம் குடும்ப அட்டைக்கு வழங்கும் பொங்கல் பரிசு பொருளுடன் ஒரு மண் பானை வழங்கினால், எங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும், தொழில் நலிவடையாமல் இருக்கும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல்கள் : விவேகாநந்தன் ,செய்தியாளர்- தருமபுரி