நீலகிரி மாவட்டம் கூடலூரில் MUD FOOTBALL எனப்படும் சேற்றில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் என்றாலே அதிகப்படியான கால்பந்து வீரர்களை கொண்ட பகுதி என அனைவரும் அறிந்த விஷயம். ஐ.எஸ்.எல் கால்பந்து பந்து போட்டியில் FC GOA(எஃப் சி கோவா), KERALA BLASTERS(கேரளா பிலாஸ்டர்) உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடிய கால்பந்து வீரர் சபீத் கூடலூரை சேர்ந்தவர் என்பது இந்த ஊருக்கான பெருமை. அவரை போலவே இந்த பகுதியில் கால்பந்து விளையாட்டில் சாதித்து வரும் வீரர்கள் பலர் உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூரை சேர்ந்த இளைஞர்கள் கால்பந்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அதாவது கூடலூர் பகுதியில் உள்ள கால்பந்து விளையாடும் இளைஞர்களுக்கு இந்த பருவமழை வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது. கேரளாவில் மட்டுமே பிரபலம் அடைந்து வந்த MUD FOOTBALL எனப்படும் சேற்றில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டு கூடலூரில் இளைஞர்கள் மத்தியில் தற்சமயம் பிரபலம் அடைந்துள்ளது.
பண்படுத்தப்பட்டு, நெல் நாற்றுகள் நடுவதற்கு தயாராக இருக்கும் நிலையில் உள்ள வயல் பகுதியில் மைதானம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த விளையாட்டு விளையாடப்படுகின்றது. மற்ற கால்பந்து விளையாட்டை போல இல்லாமல், இந்த வகையான கால்பந்து போட்டி கடினமாகவும், அதேநேரம் ஆபத்து நிறைந்தது என கூறுகின்றனர் இதை விளையாடும் இளைஞர்கள். விளையாடும் போது கண்களில் சகதி பட்டு விளையாடுபவர்கள் பலநேரம் சிரமங்களையும் சந்திக்கின்றனர். அதேபோல விதிமுறைகளை பொறுத்தவரை சாதாரண கால்பந்து விளையாட்டில் உள்ளது போல இல்லாமல், இந்த வகையான கால்பந்து போட்டியில் விதிமுறைகள் சற்று மாறுபட்டு உள்ளது.
கேரளாவில் மட்டுமே பிரபலம் அடைந்துள்ள இந்த விளையாட்டை கூடலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியது, தமிழக - கேரளா எல்லையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியான நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தான். கடந்த ஆண்டு முதன்முறையாக நடத்தபட்டாலும், இந்த ஆண்டு தான் இந்த போட்டி உள்ளூர் மக்களிடையே பிரபலம் அடைந்தது. மேலும் இதனை கூடலூரில் நடத்த பலரும் ஒத்துழைப்பு மற்றும் உற்சாகம் அளித்த நிலையில், இந்த முறை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இந்த வகை கால்பந்து விளையாட்டை நடத்த ஸ்பான்சர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் கூடலூரை சேர்ந்த 4 அணிகளும், அருகில் உள்ள கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 4 அணிகளும் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடந்த போட்டிகளில் கூடலூர், தாளூர் பகுதியை சேர்ந்த இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் தாளூர் பிரதர்ஸ் அணியினர் 1 - 0 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், ரொக்க பரிசும் வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டின் சிறப்பு குறித்து பயிற்சியாளர்கள் கூறுகையில் சாதாரண கால்பந்து விளையாட்டை போல இல்லாமல் MUD FOOTBALL விளையாடுவது மிகவும் கடினம். சாதாரண கால்பந்து போட்டியில் பந்தை சக வீரருக்கு கடத்துவது மிகவும் எளிது. ஆனால் MUD FOOTBALL விளையாட்டில் சகதி மற்றும் தண்ணீரில் பந்தை கடத்தி செல்வது என்பது சவாலான விஷயம். முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதனை விளையாட முடியும். மழை காலங்களில் இளைஞர்கள் உடற்திறனை மேம்படுத்தி கொள்ள நடத்தப்படுவதாக கூறினார். அடுத்த ஆண்டு கூடுதலான அணிகளை பங்கேற்க செய்து சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.