மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் "Walking With The Comrades" என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அப்புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டது.
அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக மா. கிருஷ்ணன் எழுதியிருக்கும் My Native Land: Essays on Nature என்ற புத்தகம் சேர்க்கப்பட்டது. இவ்விவகாரம் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிந்த நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டிருப்பதாக அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும் அதன் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டிருப்பதாக அறிந்தேன். தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது.
அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன. புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என அருந்ததி ராய் குறிப்பிட்டுள்ளார்.