தமிழ்நாடு

பறக்கும் ரயில்கள் வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு ?

பறக்கும் ரயில்கள் வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு ?

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான வரைவு அறிக்கை தயார்
செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை இனி மெட்ரோ ரயில் நிர்வாகம் பார்த்துக்கொள்ளும்.இவ்வழித்தடம் 20 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மெட்ரோ ரயில் நிர்வகிக்கும்பட்சத்தில் இந்த வழித்தடங்களின் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். பறக்கும் ரயில் நிலையங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால் அதனை கடைகள், உணவகங்களுக்குவாடகைவிட்டு வருமானத்தை பெருக்கும் முயற்சியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபடும் என தெரிகிறது.சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு, இந்தப் பயன்பாடு 20 சதவிதம் உயர்ந்துள்ளது.

இவ்வழித்தடத்தில் பயணிகள் சேவையை மேம்படுத்தவும்,பராமரித்து மேம்படுத்தவும் சென்னை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.இதற்கான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து வரைவு அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் அதன் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சாலுடன் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தா சந்தித்து வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு இறுதி அறிக்கை தயார்செய்யப்பட்டு மெட்ரோ ரயில்வசம் பறக்கும் ரயில் வழித்தடம் ஒப்படைக்க முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.