கார்த்தி சிதம்பரம் கோப்புப்படம்
தமிழ்நாடு

விமான சாகச நிகழ்ச்சி: “தகுந்த ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்” - எம்.பி. கார்த்தி சிதம்பரம்

“சென்னையில் விமான சாகச கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி ரூ.5 லட்சம் போதாது; இன்னும் அதிகம் கொடுக்க வேண்டும்” என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

PT WEB

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... “சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி, லிம்கா ரெக்கார்டு பிரேக் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அதனால் பெரிய அளவில் கூட்டம் வரும் என்று தெரியும். சமாளிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். கூட்ட நெரிசல் நடக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

Air force

ஆனால், மற்ற ஏற்பாடுகளை செம்மையாக செய்திருந்தால் இந்த ஐந்து உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து இதுபோன்ற நடக்காமல் இருக்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவார நிதி ரூ.5 லட்சம் போதாது. இன்னும் அதிகம் கொடுக்க வேண்டும். இறந்தவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலைக்கு தகுதியானவர்கள் இருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றார்.

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதிக்கு ரயில் இயக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், “மத்திய அரசு புதிதாக ரயில் சேவை துவங்குகிறார்களா என்பது தெரியாது. இந்த அரசு விரைவு ரயில்களை இயக்குவதிலேயே ஆர்வமாக உள்ளார்கள். சிறு குறு கிராமங்களுக்கு ரயில் சேவையை கொண்டு சேர்க்கும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை. இந்த ரயில்வே அமைச்சருக்கும் அந்த மனப்பான்மை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்ற பாதையில் இருந்து மாறி செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.