எம்.பி கனிமொழி pt wep
தமிழ்நாடு

"பாஜக அரசை விரட்டி அடிக்கும் வரை ஓயமாட்டோம்" - இளைஞரணி மாநாட்டில் எம்.பி கனிமொழி சூளுரை!

“தமிழக மக்கள் பாஜக-வுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்பதால்தான் பாஜக அரசு நம்மை வஞ்சிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசை விரட்டி அடிக்கும் வரை ஓயமாட்டோம்” என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

webteam

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று இளைஞரணி மாநில மாநாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எம்பி கனிமொழி, "இதே சேலத்தில்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் இங்கு நடந்த மாநில மாநாட்டில் 1997ல் கழகத்தின் கொடியை ஏற்றினார்கள். 2004 வீரபாண்டியன் நடத்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொடி ஏற்றினார். தற்போது நடக்கும் சேலம் மாநாட்டில் கொடி ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கிய போது ‘கருப்பு சிவப்பு உள்ள கட்சி கொடியில் கருப்பு நிறம் சமுகத்தில் இருக்க கூடிய பொருளாதாரத்தின் இருண்ட நிலையை காட்டுகிறது; சிவப்பு நிறம் என்பது இவை அனைத்தும் மாற வேண்டும் என்பதை குறிக்கிறது’ என்றார். இந்த நிறம் இரண்டு சிவப்பாக மாற வேண்டும் என்றால் திமுகவின் ஒளியால் அந்த இருண்மை விரட்டி அடிக்கப்படவேண்டும். 

திமுகவின் ஆட்சியில் அண்ணாவின் கனவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் நின்று இருள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்திலும் முன்னணியில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதல்வர் நமக்கு வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் சிவப்பு வந்துவிட்டது. ஆனால் வட மாநிலங்களில் கருப்பு நிறம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை விரட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதனால்தான் I.N.D.I.A கூட்டணி அமைத்து அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு கொள்கைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு உள்ளோம். ஆனால் வட நாட்டில் கோவிலைத் திறக்க உள்ளார்கள். அதைப் பற்றி நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. போலவே குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை? என நான் கேட்கப் போவதும் இல்லை. பிரதமர் மோடி ஷேத்தாடனம் செய்து கொண்டு இருக்கிறார். அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கிறேன். கோவில் கட்டடப் பணி முடிவடைவதற்குள் திறக்கலாமா?” என்றார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு எழுந்து நின்று, “திறக்கக் கூடாது” என்றார். இதையடுத்து மேடையில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து பேசிய எம். பி. கனிமொழி, “இன்று இருக்கக் கூடிய பாஜக அரசு ‘நாங்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறோம். நாங்கள்தான் சனாதன தர்மத்தை காப்பாற்றுகிறோம். நாங்கள்தான் கோவில்களை பாதுகாக்கின்றோம்; அதனால் அனைத்து கோவில்களையும் எங்களிடம் கொடுங்கள்’ எனக் கேட்கிறார்கள்.

பாஜக அரசியல் லாபத்திற்காக இந்துக்களை மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் கோவிலைத் திறக்க உள்ளார்கள். அதற்காகத் தனி பேருந்து, ரயில் இயக்கப்படுகிறது. தனியாரால் திறக்கப்படும் கோவிலுக்கு அரசு விடுமுறை விடுகிறார்கள்.

இது தொடர்பாகக் கேள்வி கேட்டால், வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை, சிபிஐ இந்த மூன்று அமைப்புகளும் நம்மைத் தேடி வரும். ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை. தொடர்ந்து நாங்கள் உங்களுடைய (பாஜக-வின்) கருத்து, கொள்கைகளை எதிர்ப்போம். மத்தியில் ஆளும் பாஜக அரசை மாற்றிக் காட்டுவோம். தமிழகத்தை எந்தெந்த முறையில் வஞ்சிக்க முடியுமோ அப்படி எல்லாம் வஞ்சிக்கிறார்கள். தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை அவர்கள் வழங்கவில்லை. இரண்டு அமைச்சர்கள் பார்வையிட்டுச் சென்றும் ஐந்து பைசா கூட வரவில்லை. குஜராத்தில் வெள்ளம் வந்த போது கோடிக் கணக்கில் பணம் கொடுத்தார்கள். தமிழகத்தில் உள்ள மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது" என்றார்.