தமிழ்நாடு

"இங்கு எழுந்த புரட்சிதான் 'தவறாக புரிஞ்சுக்க வேண்டாம்’னு சொல்ல வைச்சிருக்கு”-எம்பி கனிமொழி

"இங்கு எழுந்த புரட்சிதான் 'தவறாக புரிஞ்சுக்க வேண்டாம்’னு சொல்ல வைச்சிருக்கு”-எம்பி கனிமொழி

webteam

கியூப ஆதரவு ஒருமைப்பாட்டு விழா மற்றும் புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலெய்டா மற்றும் பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி பாரிஸ் கார்னர் ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிபிஎம் சார்பில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  சிபிஐ ( எம்)  மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி,  விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகிய தலைவர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள்  நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பின் சேகுவாராவின் மகள் அலெய்டா பேசுகையில், “இடதுசாரிகள் உலகம் முழுவதும் ஒருமைப்பாட்டை கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் எங்கள் நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதிக்காக நாங்கள் விமானங்களை வாடகைக்கு எடுக்க முயன்றால், அந்த விமானத்தின் உதிரி பாகங்களில் 10% பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருந்தால் கூட அந்த விமான நிறுவனத்தை எங்களுக்கு வாடகைக்கு பணி செய்ய விடாமல் தடுத்துவிடுகிறது அமெரிக்கா.

எங்களோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா எங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். எங்களோடு வர்த்தகம் செய்ய விரும்பவில்லையென்றால் அது அவர்களின் உரிமை. ஆனால் மற்றவர்களையும் தடுப்பது தவறு. என்ன செய்தாலும் அமெரிக்காவால் கியூப மக்களின் வாழும் உரிமையையும் மகிழ்ச்சியையும் அவர்களால் பறிக்க முடியவில்லை. அதனால் தான் நாங்கள் சோசியலிச நாடாக தொடர்ந்து நீடிக்க போராடி வருகிறோம். சோசியலிச நாடாகவே நீடிப்போம்” என்று பேசினார்.

கி.வீரமணி பேசுகையில், “உலகளாவிய பார்வை சேகுவாராவுக்கும் தந்தை பெரியாருக்கும் இருந்தது. உலகில் எந்த மனிதருக்கும் ஏற்படும் சங்கடத்தையும் துன்பத்தையும் தனக்கு ஏற்பட்டதாக கருத வேண்டும் என்று 1943 லேயே சொன்னவர் பெரியார். ஒவ்வொரு அநீதியை பார்க்கும் போதும் அதற்கு எதிராக  கோபம் ஏற்படுமானால் நீயும் என் தோழனே என்றவர் சேகுவாரா.

சேகுவாராவின் மகளை வரவேற்பது சம்பிரதாயத்திற்கு அல்ல. அலெய்டா இந்தியாவின் மகள். தமிழ்நாட்டின் மகள்.  பதவி மோகமில்லாத போராளிகளாக திகழ்ந்தவர்கள் சேவும் பெரியாரும். புதுஉலகம் படைப்போம். பொதுவுடைமை தத்துவம் காப்போம். வாழ்க தமிழ்நாடு” என்றார்.

இந்நிகழ்வில் எம்.பி கனிமொழி பேசுகையில், “தமிழர்கள் சாதாரணமாகத் தான் இருப்பார்கள். சுரண்டிப் பார்த்தால் தீங்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு முன்னர் பேசிய ஆசிரியர்  வீரமணி, தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்லும் போது பலத்த  கைதட்டல் எழுந்தது. இங்கு எழுந்த புரட்சி தான் இன்று `நான் அப்படி சொல்லவே இல்லை, நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது’ என்றெல்லாம் சொல்ல வைத்திருக்கிறது” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சே குவேரா இருந்திருந்தால் ஈழ விடுதலையை ஆதரித்திருப்பார். சே குவேரா இருந்திருந்தால் வேங்கைவயல் சாதியத்தை எதிர்த்திருப்பார். சேகுவேரா இருந்திருந்தால் சனாதனத்தை எதிர்த்திருப்பார்” என்றார்.