தமிழ்நாடு

"எங்களுக்குள் இருக்கும் உணர்வை உரசி பார்த்தால்...”- அனலாய் பேசிய கனிமொழி

"எங்களுக்குள் இருக்கும் உணர்வை உரசி பார்த்தால்...”- அனலாய் பேசிய கனிமொழி

webteam

“எங்கள் தலைவர்கள் குறித்து பேச மறுத்தால் நாங்கள் எடுத்து கூறுவோம். எங்களுக்குள் இருக்கும் உணவர்வை உரசி பார்த்தால், எங்களுக்குள் இருக்கும் தீ எதையும் பற்ற வைக்கும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசினார்.

சென்னை பெரம்பூரில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்த விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கனிமொழி கருணாநிதி எம்பி பேசுகையில், “பொதுக் கூட்டங்களுக்கு என்னை அழைத்து கஷ்டப்பட்டுத்துவதாக சேகர் பாபு கூறினார். இயக்கத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளை சந்திப்பதை காட்டிலும் மட்டறற்ற மகிழ்ச்சி எனக்கு வேறு கிடையாது. ஆகவே சேகர் பாபு எத்தனை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் நான் வருவேன். மகளிர் அணி சகோதரிகள் செய்யும் பணிகளை யாரும் பாராட்ட மாட்டார்கள். அவர்களின் உழைப்பு காற்றில் கலந்த ஒன்றாக மாறிவிடும். இந்த பொதுகூட்டத்தை புனிதவதி எத்திராஜ் முன்னின்று ஏற்பாடு செய்துள்ளார் என்று கூறப்பட்டது. மகளிர் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தலைவர் கருணாநிதியே, பேராசிரியரை இனமான பேராசிரியர் என்று தான் அழைப்பார். ஏனென்றால் தமிழ் உணர்வு, சுய மரியாதை என்றால் பேராசிரியர் அன்பழகன் தான் நம் நினைவுக்கு வருவார். எந்த இடத்திலும் தன் கொள்கையை விட்டு கொடுக்காதவர்‌ பேராசிரியர் அன்பழகன். ஒரே இயக்கத்தில் தொடர்ந்து இருந்தார் அன்பழகன். திமுக என்பது அவரது இயக்கம். இது அவரது கட்சி என்பார். இதை விட்டு அன்பழகன் எங்கும் செல்ல வாய்ப்பே கிடையாது என்று கூறுவார் கருணாநிதி. 

திமுக தலைவர் ஸ்டாலின் கூட பேராசிரியர் அன்பழகனிடம் பேசிவிட்டு தான் முக்கிய முடிவு செய்வார். கருணாநிதியையே கண்டிக்கும் அளவில் இருந்த தலைவர் அன்பழகன். நேற்று ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் நடைபெற்றுள்ளது. வருத்தமானதும்தான். சட்டமன்றம் என்பது தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்வு செய்தவர்கள் இருக்கும் இடம். ஆனால் மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத ஒருவர் ஆளுநர் அங்கு இருந்தார். அவர் அண்ணாவை, அம்பேத்கரை, காமராஜர், கருணாநிதி போன்றவர்களை இழிவுபடுத்தி இருக்கிறார். அவர் அப்படி செய்ததும் உடனே தமிழ்நாடு முதலமைச்சர், அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்.

இதுவரை எங்கும் இல்லாத வகையில் ஆளுநர் வெளிநடப்பு செய்வது நமது சட்டமன்றத்தில் தான் அரங்கேறியுள்ளது. ஆளுநர் பதவி தேவையில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்போரின் கருவியாக இருக்கிறது ஆளுநர் பதவி என்று 1967 ஆண்டிலேயே பேராசிரியர் பேசியுள்ளார். ஆளுநர் நம்மை மதிக்க தயாராக இல்லை‌. உணவுர்களை புரிந்து கொள்வது கிடையாது. குழப்பத்தை விளைவித்துக்கொண்டு இருக்கிறார். இவருக்கு ஏன் விளக்கம் அளித்துக் கொண்டு இருக்க வேண்டும்? மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு பணியாற்ற வேண்டும்.

அண்ணா யார், காமராஜர் யார், கருணாநிதி யார், திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன.... இப்படி விளக்கம் சொல்லிக்கொண்டி இருக்க வேண்டுமா? ஆளுநருக்கு பாடம் எடுக்க வேண்டுமா? எனில், இந்த பதவி அவருக்கு தேவையில்லை. குழப்பம் விளைவிக்க கூடியவராக இருக்கும் அவரேவும், ஒரு நன்மையை செய்து கொண்டிருக்கிறார். அது என்னஎன்றால், இச்சூழல் தலைவர்கள் குறித்து நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

சொல்லப்போனால் நாங்களேவும் தமிழ்நாடு என சொல்லிய அதேநேரத்தில் தமிழக முதல்வர் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தோம். ஆனால் `தமிழ்நாடு என சொல்லாதே; தமிழகம் என சொல்லு’ என சொன்னதால் தான், இப்போது நாங்கள் `தமிழ்நாடு, தமிழ்நாடு’ என்று சொல்கிறோம். எங்கள் தலைவர்களை பேச மறுத்தால் நாங்கள் எடுத்து கூறுவோம். எங்களுக்குள் இருக்கும் உணவர்வை உரசி பார்த்தால் எங்களுக்குள் இருக்கும் தீ எதையும் பற்ற வைக்கும்" என்று பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவினருக்கு பொங்கல் பொருட்கள், நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.