மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் திமுக எம்.பி. கனிமொழி, எ.வ வேலு ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பிறகு சென்னை வந்தடைந்த எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “ குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இது திமுக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது தொடங்கியது, இந்த குலசேகரப்பட்டினத்திற்கான திட்டம். மேலும் முதலமைச்சராக கலைஞர் இருந்தபோதும் இதனை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்காக நிலத்தை சீக்கிரம் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் துரிதபடுத்தியதன் காரணமாகத்தான் தற்போது இது சாத்தியமாகியுள்ளது.மேலும் தற்போது நடந்து முடிந்த பட்ஜெட்டிலும் கூட இந்த ஏவுதளத்திற்காக 2000 ஏக்கரை ஒதுக்கி தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இப்படி, குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை திமுக அரசு தொடர்ந்து எடுத்து வந்தது. ஆகவே இத்திட்டத்தில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. மேலும் மாநில அரசின் திட்டங்களுக்குத்தான் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. இது எங்கள் தலைவர் கலைஞரின் கனவு திட்டம். ஆகவேதான் எ.வ.வேலு அவர்களும் , நானும் இவ்விழாவில் கலந்து கொண்டோம். விழாவில் பிரதமருக்கு என் பெயரை கூட சொல்வதற்கு மனமில்லை.” என்று பேசினார்.