ஆதவ் அர்ஜூனா, திருமாவளவன், ஆ. ராசா pt web
தமிழ்நாடு

”புதிதாக கட்சிக்கு வந்தவர் கொள்கை புரிதலின்றி பேசியிருப்பார்; திருமா இதை ஏற்க மாட்டார்”-ஆ.ராசா எம்பி

”இடதுசாரி சிந்தனைகளையும் தாண்டி, தமிழ்மொழி, தமிழ் இனம் என்ற வரலாற்றுப் பின்னணி புரிதலுடைய திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். இந்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்" எம்பி ஆ. ராசா

PT WEB

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவரோ, “நான்கு ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் துணை முதலமைச்சராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லையே” என தெரிவித்திருந்தார். வேறு ஒரு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்திருந்தபோதும், “கூட்டணிக் கட்சிகள் இல்லையென்றால் திமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது. நேற்று வந்தவரை துணை முதலமைச்சர் ஆக்குவோம் என சொல்கிறார்கள். என் தலைவர் ஏன் இன்னும் ஆகவில்லை என தொண்டர்கள் கேட்கிறார்கள். எனவே தொண்டர்களின் உணர்வை நான் வெளிப்படுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனா

ஏற்கனவே பட்டியலின முதலமைச்சர் விவகாரம் தொடர்பாக திருமாவளவன் பேசியது, மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக அதிமுகவிற்கு முதலில் அழைப்பு விடுத்து, பின் திமுகவிற்கு அழைப்பு விடுத்தது என சில விஷயங்கள் விவாதமானது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசிய இந்த கருத்துக்களும் பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கூறுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அந்த மாவட்டத்துக்காரன் என்ற முறையில், கடந்த 40 ஆண்டுகளாக தெரியும். கல்லூரி காலத்தில் இருந்து அவரை நான் அறிவேன். மாணவப் பருவத்திலேயே அவருடன் பல்வேறு மேடைகளை பகிர்ந்துகொண்டவன். அவருடைய இடதுசாரி சிந்தனை இன்று இந்தியா முழுவதிலும் எதிரொலிக்கிறது என்பதில் நானும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பெருமை கொள்கிறோம்.

மதவாதத்தை ஒழிப்பதில், சமூக நீதியைக் காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கிற அரசியல் கட்சிகளில் நல்ல இடத்தில் விசிக இருக்கிறது. இந்த சூழலில், அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கைப் புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல.

இன்னும் சொல்லப்போனால், இடதுசாரி சிந்தனைகளையும் தாண்டி, தமிழ்மொழி, தமிழ் இனம் என்ற வரலாற்றுப் பின்னணி புரிதலுடைய திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். இந்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார். இத்தகைய கருத்தைக் கூறியவர்களை அவர் அனுமதிக்கமாட்டார் என்கிற நம்பிக்கை திமுகவிற்கு இருக்கிறது. திருமாவளவனின் ஒப்புதலுடன் அவர் பேசி இருக்க மாட்டார் என்பது என் எண்ணம்” என தெரிவித்தார்.