Hill Rail file
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் டூ உதகை: மீண்டும் துவங்கிய மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையத்தில் மழையால் தடைபட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. செல்ஃபி எடுத்து மகிழ்ந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

webteam

செய்தியாளர் - இரா.சரவணபாபு

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் பாதை செங்குத்தான மலை காட்டின் நடுவே செல்லும். மழை காலங்களில் ரயிலின் இருப்பு பாதையில் மண் சரிவு ஏற்படும் என்பதால், அக்காலங்களில் ரயில் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நின்றுவிடும். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவது தொடர் நிகழ்வாகி வருகிறது.

ooty hill train

அந்தவகையில் சமீபத்தில் மலைப் பாதையில் பெய்த தொடர் மழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை ஒரு சில இடங்களில் சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்ததாலும் மண்சரிவுகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததாலும் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது.

கடந்த 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் இன்று காலை 7.10 மணிக்கு உதகை நோக்கி நீலகிரி மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தபடி உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர்.