தமிழ்நாடு

அரசுப் பேருந்து மோதி பலியான எஸ்.ஐ - அதிரடியாக இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தீர்ப்பாயம்

Sinekadhara

அரசுப் பேருந்து மோதியதால் பலியான காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 73 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோயிலைச் சேர்ந்த 56 வயதான தேவராஜ் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவர் 2015ஆம் ஆண்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி அருகே அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதால் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கணவர் இறப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி மாலா சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி. தங்கமணி கணேஷ் முன்பு விசாரணை நடந்தது.

அந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பேருந்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் இயக்கியதே காரணம் என்பது நிரூபணமாவதால், விபத்தில் இறந்த தேவராஜின் மரணத்திற்கு இழப்பீடாக, 73 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை, ஓரண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் அவரது மனைவி மாலாவிற்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.