சம்பளம் முறையாக வழங்குவதில்லை எனக்கூறி கொடைக்கானல் அன்னை தெரெசா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரெசா பல்கலைக்கழக பேராசிரியைகள், பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9 மாதங்களாக முறையான தேதிகளில் சம்பளம் வழங்குவதில்லை எனவும், இதனால் மாத வீட்டு வாடகை உள்ளிட்ட இதர செலவினங்களுக்கு கூட கஷ்டப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 10-15 தேதிகளுக்கு பிறகே சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த மாதம் தற்போதுவரை சம்பளம் வழங்கவில்லை எனவும் பேராசிரியைகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேராசிரியைகள் கூறுகையில், “ஒரு சில சமயங்களில் சம்பளத்தொகை இருந்தும் அதை காலதாமதப்படுத்தி வழங்குகின்றனர். முன்பெல்லாம் ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்துவிடும். கடந்த 9 மாதங்களாக முறையாக சம்பளம் வழங்குவதில்லை. நிர்வாகத்திடம் கேட்டால் நிதி இல்லை என்று சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் சம்பளம் முறையான தேதிகளில் வந்துவிடும். நாங்கள் எல்லோருமே இந்த சம்பளத்தை மட்டுமே நம்பிதான் இருக்கிறோம். இதனால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இதில் தலையிட்டு நிதித்தொகை வழங்க வேண்டும். எங்களுக்கு முறையான சம்பளமும், பணி பாதுகாப்பும் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்.