தமிழ்நாடு

“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்”: தாய் கண்ணீர் புகார்

“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்”: தாய் கண்ணீர் புகார்

Rasus

வீட்டை பத்திரப்பதிவு செய்து கொண்டு தற்போது கோயிலில் பிச்சை எடுக்க விட்டிருப்பதாக மகன் மீது மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ரமணா நகரை சேர்ந்தவர் ராதாம்மாள். 75 வயது மூதாட்டி. இவருக்கு ரகு என்ற மகனும், காஞ்சனா என்ற மகளும் என மொத்தமாக இரண்டு குழந்தைகள். காஞ்சனாவிற்கு திருமணமாகிவிட்டது. கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். ராதாம்மாளின் கணவர் தவறிவிட்டார். ராதாம்மாளுக்கு அவரின் தாய்வீட்டு சீதமான ஒரு வீடு ஒன்று கிடைத்துள்ளது. அதில்தான் அவர்கள் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் ரகு தனது தாயான ராதாம்மாளிடம் வீட்டை தன் பெயரில் எழுதி வைக்கும்படியும், கடைசி வரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். மகன் எப்படி நம்மளை கைவிட்டுச் செல்வான் என உறுதியாக நம்பிய ராதாம்மாள் வீட்டை மகன் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ஆனால் பத்திரப்பதிவுக்கு பின் ரகுவின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ராதாம்மாளை வீட்டில் வைத்து கவனிக்காமல் அவரை கோயிலில் விட்டுச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் ராதாம்மாள் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், தனது மகனான ரகு தன் வீட்டை பத்திரப்பதிவு செய்து கொண்டு தற்போது கோயிலில் பிச்சை எடுக்க விட்டிருப்பதாக கூறியுள்ளார். எனவே கோயிலில் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே மூத்தமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007 பிரிவின் கீழ் ரகு மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.