பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் தட்டை வைத்து ஒலி எழுப்பி மருத்துவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தச் சுய ஊரடங்கு இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனைகளில் தன்னலம் கருதாமல் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கைதட்டி வருகின்றனர். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி, காவலர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் தங்கள் வீட்டின் வெளியே நின்று கைதட்டி பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார், ஹீராபென் அவரது இல்லத்தின் முன்பு தட்டை வைத்து ஒலி எழுப்பி, அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.