Hospital pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதி விபத்து – தாய் மகன் உயிரிழப்பு

ஓசூரில் சாலையைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்த நிலையில், தந்தையும் ஒரு வயது மகனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலை கிட்டப்பன்குட்டையைச் சேர்ந்தவர் அஸ்லம் (38). வண்ணம் பூசும் பணி செய்து வரும் இவருக்கு நஸ்ரின் தாஜ் (32) என்ற மனைவியும், 7 வயதில் அய்யான் மற்றும் 1 வயதில் அப்துல்லா என்ற இரு மகன்களும் உள்ளனர்.

தாய் மகன் உயிரிழப்பு

இந்நிலையில், இவர்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு அங்கிருந்து பேருந்தில் ஓசூர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓசூர் லால் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி, பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று லாரி அவர்கள் மீது மோதியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த மனைவி நஸ்ரின் தாஜ், மகன் அய்யான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அஸ்லம், மற்றும் கைக்குழந்தை அப்துல்லா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

accident

உயிரிழந்த இருவரது சடலத்தையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.