namakkal faceboob
தமிழ்நாடு

விஷம் கலந்த சிக்கன் ரைஸ்| இளைஞரின் கொடூர செயலால் தாத்தாவை அடுத்து, தாயின் உயிரும் பறிபோன சோகம்!

நாமக்கல்லில் கல்லூரி மாணவனின் தவறான பழக்கம் ஒரு ஏழையின் குடும்பத்தையே சிதைத்துள்ளது.

PT WEB

நாமக்கல்லில் கல்லூரி மாணவனின் தவறான பழக்கம் ஒரு ஏழையின் குடும்பத்தையே சிதைத்துள்ளது.

நாமக்கல் கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி ஓட்டுநரான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பகவதி, பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துக்கொண்டே, நாமக்கல்லில் உள்ள தனியார் இண்டர்நெட் சென்டரில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.

கடந்த 30-ம் தேதி இரவு நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்று, அவரது தாயார் நதியா மற்றும் தாத்தா சண்முகநாதன் உள்ளிட்டோருக்கு கொடுத்துள்ளார். ஒரு சிக்கன் ரைஸை பகவதியும் சாப்பிட்டுள்ளார். அவருக்கு எதுவும் ஆகாத நிலையில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சண்முகநாதன், நதியா ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், பார்சல் வாங்கிச் சென்ற சிக்கன் ரைஸ்சில் பூச்சி மருந்து கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் பகவதியை பிடித்து விசாரணை செய்ததில், கல்லூரி பயின்று வரும் அவருக்கு பெண்களுடன் அதிகளவு பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்ததை அறிந்த தாயும், தாத்தாவும் கண்டித்து படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பகவதி தனது குடும்பத்தில் உள்ளவர்களை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பகவதியை கைது செய்த நாமக்கல் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.