தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் உதகையின் தற்போதைய நிலை

சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் உதகையின் தற்போதைய நிலை

webteam

உலக சுற்றுலா தினமான இன்று தமிழகத்தில் அதிக சுற்றுலா பயணிகள் செல்லவிரும்பும் உதகையில், போதிய உள்கட்டமைப்புகள் இல்லாமல் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் கடும் அவதி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் எப்போதும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமே உள்ளனர். அதிலும் கோடை சீசன் காலம் மற்றும் நவம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளால் உதகை நிரம்பி வழியும். தமிழகம் மற்றும் அண்டை மாநில மக்களால் பெரிதும் விரும்பப்படும் சுற்றுலா தலமான உதகையில் போதிய உள்கட்டமைப்புகள் செய்யப்படாமலேயே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ் மற்றும் படகு இல்லம் ஆகிய 3 இடங்களில் பெட்டக வசதியுடன் கூடிய குளியலறை மற்றும் நவீன கழிவறை வசதிகள்‌ உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்ற‌‌னர்.

உதகை பேருந்து நிலையத்தில் சிறு மழைக்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. உதகையின் பிரதான சாலைகளில் வாகனங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. மத்திய பேரூந்து நிலையத்தை நவீன முறையில் மாற்றியமைக்க சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உதகை மக்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வருவாய் ஆதாராமாக விளங்கும் உதகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உதகை வாழ் மக்களில் கோரிக்கையாக உள்ளது.