டி.என்.பி.எஸ்.சி. முகநூல்
தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி.குரூப்-2 |இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதவில்லை!

PT WEB

அரசு வேலை என்பது பலருக்கும் கனவு... அரசுத்துறைகளில் பணியாற்றுவதற்காக எண்ணற்றோர் தேர்வுக்குத் தயாராகும் நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என். பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதவில்லை.

இந்த ஆண்டு இதுவரை 10, 315 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு கிடைக்க தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 2,327 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த குரூப்-2 எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

அரசு வேலை மீதான ஆர்வத்தில் 50 வயதைக்கடந்த ஒரு வேதியியல் ஆசிரியர், 20 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். இப்போது அவரது மகளும் இதில் சேர்ந்து கொண்டார். தந்தையும், மகளுமாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய சுவாரஸ்யம் திருச்சியில் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் பிரசிடென்சி பள்ளியில் 300 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. இங்கு ஆய்வு செய்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே. பிரபாகர் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார் . இந்தத் தேர்வை எழுத 7 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்த நிலையில், 5 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மட்டுமே தேர்வெழுதினர். 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்தத்தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும். அதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவி குறித்த சர்ச்சை கேள்வி!

இதற்கிடையே குரூப் 2 வினாத்தாளில், வினா எண் 90-ல் ஆளுநர் பதவி குறித்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது அறிவு பகுதியில் மத்திய கூட்டாட்சியில் ஆளுநர், "அரசின் தலைவர்" மற்றும் "மத்திய அரசின் பிரதிநிதி" என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார் எனவும், இதற்கான காரணம் ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த கூற்று சரியா, அல்லது பகுதி சரியா, அல்லது முழுவதும் தவறா என 4 விதமான பதில்கள் கொடுத்து அதில் எது சரியான பதில் என தேர்ந்தெடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. புதிய தலைமுறைக்காக திருச்சியில் இருந்து சார்லஸ், சென்னையில் இருந்து விக்னேஷ்முத்து