மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றம். ஆனாலும் மலக்குழிக்குள் இறங்கி மனிதக் கழிவினை அகற்றுவது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றுவதில் சாதிய படிநிலை காரணமாக குறிப்பிட்ட சமூகத்தினரை ஈடுபடுத்தும் மனநிலை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விஷவாயு தாக்கி உயிரிழந்து உள்ளனர் என்று, கழிவு நீர் இறப்பு ஒழிப்பு விரைவு நடவடிக்கை குழு தெரிவிக்கிறது. 15 ஆண்டுகளில் இதற்கும் அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் இருந்திருக்கும் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் கழிவுநீர் இறப்பு ஒழிப்பு விரைவு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் உதயன்.
மேலும், "சாதி இருக்கும் வரை விஷவாயு தாக்கி உயிரிழக்கும் மக்கள் இருப்பார்கள். மனிதக் கழிவுகளை அகற்றும் போது ஆண்டுக்கு 20 - 30 பேர் இறந்து போகின்றனர்" என்கிறார் அவர்.
மனிதக் கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மஞ்சள் மரணங்கள் 2023 என்ற புத்தகத்தை அரசு மருத்துவரும் எழுத்தாளருமான அனுரத்னா எழுதியுள்ளார்.
“தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் கழிவுநீர் தொட்டி மற்றும் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், சென்னையில் 3 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவரும் உயிரை பறிகொடுத்துள்ளனர். இதில் 7 உயிரிழப்புகள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்பட்டது” என்கிறார் மஞ்சள் மரணங்கள் புத்தகத்தின் ஆசிரியர் அனுரத்னா.
"தூய்மை பணியாளரின் மரணத்தை கண்டும் காணாமலும் செல்கிறோம். எவ்வளவு மரணங்கள் நடந்திருக்கிறது என்ற புள்ளி விவரங்கள் தற்போது வரை இல்லை. மனித கழிவுகளை மனிதன் அகற்றுவதை தடுக்க மிக கடுமையான சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட சாதிக்கு எதிரான ஒரு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்” என்றும் கூறுகிறார் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்.
“உயிரிழப்புகள் ஏற்படும் போது நிவாரணத்தை வழங்கி விட்டு கடந்து சென்று விடுகிறோம். சமுதாயத்தின் மனதிற்குள் சாதியகட்டமைப்பு ஊறிவிட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கழிவுநீர் அகற்றுவதற்கு அறிவியல் முறைப்படி அதற்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயோ டாய்லெட் முறைதான் இதற்கு தீர்வாக அமையும்” என்கிறார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முன்னாள் விஞ்ஞானி இளங்கோ.
சென்னையில் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்யவும், அகற்றவும் 3 புதிய இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதே போன்று இயந்திரங்களை அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிக்கு வழங்க வேண்டும் என கழிவுநீர் இறப்பு ஒழிப்பு விரைவு குழு வலியுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு மனிதனும் சமமாக மதிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு உயிரிழப்பும் தடுக்கப்பட வேண்டும்... கழிவுநீர் விஷவாயு மரணத்துக்கு தீர்வு எப்போது?