தமிழ்நாடு

சென்னையில் விடாமல் கொட்டித் தீர்த்த மழை

rajakannan

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. 

இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வந்தது. இதில், மற்றொரு விஷயம் என்னவென்றால், பகலில் வெயில் சுட்டெரிக்கின்றது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தி.நகர், பெருங்களத்தூர், வண்டலூர், மெரினா, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று மழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. வழக்கமான மழை போல் இல்லாமல் அது இருந்தது. 

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தமிழகம் மற்றும் புதுவையின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தரவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிருமுறை லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் வடக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம்”என்று தெரிவித்தார்.