சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இவ்விழா கடந்த 4 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று மாலையில் மலையடிவாரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், நாளை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்வு மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை வலைதளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கந்தசஷ்டி திருவிழாவின் போது பக்தர்கள் தங்கள் கைகளில் காப்பு கட்டிக்கொண்டு ஏழு நாட்களுக்கு சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர். சூரசம்காரம் நடைபெறக்கூடிய இன்றைய தினத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாழைத்தண்டு, பழ வகைகளை நறுக்கி தயிருடன் கலந்து முருகனுக்கு படையலிட்டு வழிபாடு செய்து விரதத்தை கடைபிடித்து வருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தண்டு விரதம் மேற்கொள்வதற்காக குவிந்துள்ளனர்.
நாளை நடைபெறக்கூடிய திருக்கல்யாண நிகழ்ச்சி முடிவடைந்ததும் முருகனுக்கு அறுசுவை உணவு படைத்து பக்தர்கள் கந்தசஷ்டி விரதத்தை முடித்துக் கொள்கின்றனர். மேலும் இன்று மாலையில் நடைபெறக் கூடிய சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் தேவஸ்தான ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கிரிவலப் பாதையில் பாதுகாப்புப் பணியில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.