தமிழ்நாடு

கனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு !

கனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு !

webteam

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென் மாவட்டத்தில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென சாரல் மழையாக ஆரம்பித்து மிதமான மழையாக பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டத்தில் பிரதான இடங்களில் சூரைகாற்றுடன் ம‌ழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன.

நெல்லை மாவட்டம் நான்குநேரி அடுத்த கூந்தன்குளம் என்ற இடத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் 43 வகை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருகின்றன. செம்மையாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நாரைகளின் வரவு அதிகமாக இருக்கும். தமிழகத்தின் பருவ நிலையை விரும்பி ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பூநாரை, செங்கால்நாரை என பல்வேறு வகையான நாரைகள் தமிழத்தை நோக்கி படையடுத்து வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று வள்ளியூர், நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. அதில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்த 300 க்கும் மேற்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவைகள் உயிரிழந்தன. குறிப்பாக நாரைகள் பெருமளவு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அங்கு வனத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.