தமிழ்நாடு

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

webteam

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் 2,500 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மணல் குவாரிகள் மூலம் மணல் அள்ளும் இத்தொழிலாளர்கள், கொரோனா இரண்டாம் பரவல் காலகட்டத்தில் மணல் அள்ள அரசு தடைவிதித்தது. அதன் பிறகு இப்போதுவரை மணல் அள்ள அரசு அனுமதிக்காத காரணத்தால், மாட்டு வண்டித் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் அரசு அனுமதி அளிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தினைக் கைவிட்டனர். ஆனால் தற்போது வரை அரசு அவர்களை மணல் அள்ள அனுமதிவில்லை என்பதால், மீண்டும் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதனடிப்படையில் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி வருவாய் வட்டாட்சியர் சித்ரா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜா, லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் சீத்தாராமன், சமயபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மணல் அள்ள அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டத்தினைக் கைவிடுவதாகவும், அனுமதி அளிக்கவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.