சென்னை வேளச்சேரியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 மாத ஆண் குழந்தை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் 5-வது தெருவை சேர்ந்தவர்கள் வெங்கண்ணா - உமா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சார்விக் என பெயரிட்டனர். நேற்று முன்தினம் இரவு புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டை திறந்துவைத்து தூங்கியபோது வீட்டில் படுத்திருந்த குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தபோது, இரவு 2 மணியளவில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் தனியாக அந்த வழியாக நடந்து சென்றதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசாருக்கு குழந்தையின் தாய் உமா மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து உமாவிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை கொன்றதை உமா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து குழந்தையை கொன்ற புகாரில் தாய் உமா கைது செய்யப்பட்டுள்ளார். பாலூட்டும் போது மார்பில் அதிக வலி இருந்த பிரச்னையால் குழந்தையை கொன்றதாகவும் உமா போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.