தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் எப்பொழுது அமைக்கப்படும் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், வரைவுத் திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிடவும், பருவக்காலத்திற்கு முன்பாக செயல்படுத்தவும் உத்தரவிட்டு அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. இதன் மூலம் நடப்பு பருவ காலத்திலேயே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள், தங்கள் அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்பதையும், தங்களின் நீர்த் தேவை எவ்வளவு என்பதையும் மாதாந்திர அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் காவிரி நடுவர்மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் நீர் திறந்துவிடப்படும்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்து வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் ஆணையம் அமைக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.