சென்னை தலைமைச் செயலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில்,
“முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொரோனா பெருந்தொற்று, பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என அடுத்தடுத்து எதிர்கொண்ட பேரிடர்களை மிகச் சிறப்பாக கையாண்டு மக்களை காப்பாற்றியுள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. அதனால் மழைநீர் வடிகால்களை சீரமைப்பது, கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்டவை என பல்வேறு பணிகளை அரசு வேகப்படுத்தியுள்ளது. செயல்பாட்டில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல் நம்மிடம் உள்ளது. எனவே தேவையான உபகரணங்களை வார்டுவாரியாக பிரித்து வைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மழையின்போது டவர்கள் செயல்படவில்லை. எனவே அதிகாரிகளுக்கு வயர்லெஸ் போன் வழங்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.மரம் வெட்டும் உபகரணங்களை கூடுதலாக இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பால் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். ஒரு வார்டுகளுக்கு 1000 பால் பாக்கெட், 1000 பிரட் பாக்கெட்டுகள் வழங்க தயாராக இருக்க வேண்டும்.
சுனாமி குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்க வேண்டும்” என அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி பேசினார்.